Sporty Magazine official website | Members area : Register | Sign in
புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டி!

மின்னஞ்சலில் செய்திகளைப் பெற

தமிழீழத்தை வென்றெடுக்கவும் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் பொங்கல் நாளில் உறுதியேற்போம்! எழுச்சித்தமிழர் பொங்கல் வாழ்த்து!


 தமிழினத்தின் தனிச் சிறப்பான விழா பொங்கல் திருவிழாவாகும். உழவுத் தொழிலுக்கும் உழவர் பொதுமக்களுக்கும் சிறப்புச் செய்யும் ஒரே விழா உலகில் பொங்கல் திருவிழாவே ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற பொன்மொழிக்கேற்ப ‘போகித் திருநாளும்’ ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்பதற்கேற்ப கதிரவனை வழிபடும் வகையில் ‘பொங்கல் விழா’வும், வேளாண்மைத் தொழிலையும் அதற்குப் பெருந் துணையாய் இருக்கும் எருதுகளைப் போற்றும் வகையில் ‘மாட்டுப் பொங்கல் விழா’வும், வயதில் மூத்தோரைக் கண்டு வணங்கி அவர்களின் வாழ்த்துகளைப் பெறும் வகையில் ‘காணும் பொங்கல் விழா’வும் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் தமிழர்களின் பெருவிழாவான திருவிழாவே பொங்கல் விழாவாகும்.
இயற்கையோடு இயைந்து தமது வாழ்வைத் தகவமைத்துக்கொண்ட தமிழினம், காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதனடிப்படையில் தமது பண்பாட்டு நெறிகளையும் வரையறுத்துக் கொண்டது. அதன்படியே தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டு நாளாகக் கொண்டாடி வந்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதுவும் இத்தகைய பண்பாட்டு நெறிமுறைகளின்படி வந்த வழக்குமொழியேயாகும். தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழர்கள் இன்று தமது போற்றுதலுக்குரிய பழங்காலத்துப் பண்பாட்டு அடையாளங்களை இழந்து, வடஇந்தியக் கலாச்சாரம் மற்றும் மேலைநாட்டுக் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஆட்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களை மீட்பதற்காகக் கடந்த காலங்களில் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தமிழ்க் கடல் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் 1920களின் தொடக்கத்தில் ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை இணைத்து அதனையே திருவள்ளுவராண்டாகவும், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாகக் கொண்டாட வேண்டுமெனவும் தமிழ் உலகத்திற்கு அறிவிப்புச் செய்தனர். அதன்படி தை முதல் நாளையே நாம் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் என்றும் தமிழினத்தின் ஒரே பண்பாட்டு அடையாளமாக இருக்கிற பொங்கல் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம் என்றும் இனமான உணர்வுள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.



ஈழத் தமிழினத்தின் அவலம் இன்னும் துடைக்கப்படாத நிலையில், சிங்கள இனவெறியர்களால் ஈழ மண்ணில் திணிக்கப்படும் கலாச்சாரச் சீரழிவுகளைத் தடுக்க இயலாத நிலையில் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகளால் அறிவிக்க இயலவில்லை.
மேலும் அண்மையில் வீசிய ‘தானே’ புயலால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்கள் அகதிகளாக உருவாகியுள்ள நிலையில், அவர்களுக்குரிய இழப்பீடு மற்றும் மீட்புப் பணிகள் ஏதும் இதுநாள் வரையில் சரிவர கிடைக்கப்பெறவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அத்துடன், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலால் மதுரை, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குரியாகியுள்ளது.
எனினும், தமிழினத்தின் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் உலகம் தழுவிய அளவில் பொங்கல்விழாவைக் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சாதி, மதங்களின் பெயரால் நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராடவும், தமிழீழத்தை வென்றெடுக்கவும், மண்ணுரிமை, நீர் உரிமை உள்ளிட்ட தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் இப்பொங்கல் நாளில் உறுதியேற்போம்.


இவண்
 
 
(தொல். திருமாவளவன்) 

பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவிடத்தில் எழுச்சித்தமிழர் அஞ்சலி

பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி - குடும்பத்தினருக்கு ஆறுதல்



தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் அவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால், இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்காது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தூத்துக்குடி சென்றார். அலங்காரத்தட்டில் உள்ள பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பசுபதி பாண்டியனின் தம்பி தாமோதரனிடம் கொலை சம்பவம் குறித்து விபரங்களை  கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் கொலை காட்டுமிராண்டித் தனமானது. கூலிப்படையை ஏவி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் இந்த படுகொலையை செய்துள்ளது. 

படுகொலைக்கு முந்தைய நாள் பசுபதி பாண்டியன் முல்லைப்பெரியாறு அணைக்காக தேனியில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்கள் தலைவராக இருந்து வந்த பசுபதி பாண்டியன் கொலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒருசிலர் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. 

இறுதி ஊர்வலத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறி 500பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டு்ம். தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுதும் தொடர்கிறது. 

தலித் தலைவர் என்பதால் 3முறை தாக்கப்பட்டவர் என்பதை அறிந்த போலீசார் பசுபதி பாண்டியனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்காது. சாராய வியாபாரிகளுக்கும், தனி செல்வாக்கு உள்ளவர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்குகிறார்கள். போலீசாரின் அலட்சியத்தால் கொலை நடந்துள்ளது.

மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. பொது நிகழ்ச்சி, இறுதி ஊர்வலம் போன்றவற்கு போலீசார் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை. கொலை நடந்து அரைமனி நேரத்திற்கு பின்னர்தான் போலீசார் அங்கு சென்றுள்ளனர். தலித் தலைவர்கள் மீதான இந்த தாக்குதல்களை கண்டித்து, தோழைமைக் கட்சிகளுடன் சேர்ந்து ஆலோசித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

பசுபதி பாண்டியன் படுகொலை - எழுச்சித்தமிழர் கண்டனம்

பசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்



தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத்தில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனத்தை நடத்திய வன்முறை கொலையாளிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பசுபதிபாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்புவகித்து அரசியல் பாணியாற்றினார். அத்துடன், தலித் அமைப்புகளோடும் தமிழ்த்தேசிய அமைப்புகளோடும் பல களப் பணிகளை ஆற்றினார்.

ஈழத்தமிழரின் உரிமைகளுக்காகவும் தோழமை இயக்கங்களோடு சேர்ந்து குரல் எழுப்பினார். இந்தக்  கொடூர படுகொலை சம்பவத்தின் முதல் நாள் தேனி நகரத்தில்  முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர்  கூட்டமைப்பின் சார்பில் உண்ணாநிலையிருந்து  போராட்டம்  நடத்தினார்.

இவ்வாறு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏழை-எளியோருக்காகவும் ஈழத் தமிழருக்காகவும் போராடிவந்த பசுபதிபாண்டியன் அவர்களை சமூக விரோதக் கும்பல் படுகொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக, தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் போராடுகிற தலைவர்கள் இருந்தாலும்  அவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் சுற்றுப்  பயணங்களின்போதும் போராட்டங்களின்போதும் போதிய அளவில் காவல்துறையினர்  பாதுகாப்பு வழங்குவதில்லை. பொது இடங்களில் கொடியேற்றுகிற நிகழ்ச்சியின்போதும்  சுற்றிவளைத்து கல்வீசித் தாக்குவதும், நாட்டு வெடிகுண்டுகளை வீசுவதும் படுகொலை செய்வதுமான நடவடிக்கைகள் தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு எதிராக மட்டுமே நிகழ்ந்து வருகின்றன.

தியாகி இமானுவேல்சேகரன், மேலவளவு முருகேசன் படுகொலை முதல் பசுபதி பாண்டியன் படுகொலை வரை அண்மைக்கால நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஒரு சமூக அமைப்பின் தலைவர் என்கிற முறையிலும் ஒரு அரசியல் பிரமுகர் என்கிற வகையிலும் அவருக்கு காவல்துறையினர் சார்பில் உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் அத்தகைய பாதுகாப்பு வழங்குவதில்லை என்கிற நிலையே உள்ளது. ஆகவேதான், இந்தப் படுகொலையும் சமூக விரோதிகளால் மிக இலகுவாக செய்யப்படுகிறது.

பசுபதி பாண்டியன் அவர்களின் மறைவால் பெரும் துக்கத்தில் ஆளாகியுள்ள அவரது பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட உற்றார் உறவினர் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது உடலை கட்டுப்பாட்டுடன் நல்லடக்கம் செய்திட அவரது இயக்கத் தொண்டர்கள் முன்வரவேண்டும். அதுவே அவருக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும். சமூக விரோதிகள்  திட்டமிட்டே நல்லடக்க நிகழ்ச்சியிலும் வன்முறையை தூண்ட முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் நல்லடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

3 நாட்களாக கடலூர் மற்றும் புதுவையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார் ! புயலில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் நிதிஉதவி !

3 நாட்களாக கடலூர் மற்றும் புதுவையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார் ! புயலில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் நிதிஉதவி !


 
டிசம்பர் 29 ஆம் தேதி இரவு தானே புயல் தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக தாக்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டமும் புதுச்சேரியும் கடும் பாதிப்புக்குள்ளானது.

3000த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மரங்களும் வேரோடு சாய்ந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடிசை வீடுகளும் ஒட்டு வீடுகளும் புயலில் இடிந்து தரைமட்டமானதால் அவர்கள் பள்ளிகூடங்களிலும் திருமண மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தானே புயலில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த 3 நாட்களாக (1.1.2012, 3.1.2012, 4.1.2012) கடலூர் மாவட்டத்தில் புயலால் ஆன சேதங்களை ஆய்வுசெய்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உயிரிழந்தோரின் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் அவர்கள் “தமிழக அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் வழங்குவதாக அறிவித்திருகிறது. அதை 5 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக முதலவர் அவர்களை கேட்டுகொள்கிறோம். மின்இணைப்பை விரைந்து ஏற்படுத்துவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கனக்கான மக்கள் பள்ளிகூடங்களிலும் திருமண கூடங்களிலும், பொது இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் தஞ்சம் அடைந்திருக்கிற நிலை ஏற்பட்டிருகிறது. ஆகவே உணவு உடை போன்ற உடனடி தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் அரசு மிகத்தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளையும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் முன்தொகையாக வழங்க வேண்டும் அப்போது தான் இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க முடியும்.
தமிழக அரசு இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் கூரை வீடுகளே இல்லாத அளவிற்கு அனைவருக்கும் காரை வீடுகள் கட்டி தர வேண்டும், இப்போது உடனடி நிவாரணம் ஐயாயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அதை இருபத்தைந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், சுனாமியில் ஏற்பட்ட பாதிப்புகளை போல இந்த புயல் தாக்குதலினால் ஏற்பட்டிருகிறது எனவே இதை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட அணைத்து பகுதிகளுக்கும் இந்திய அரசு போதிய நிதி உதவி செய்ய வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரங்களாவது வேரோடு சாய்ந்திருக்கும் அதனால் அம்மாவட்டத்தில் மரங்களை நடுவதற்குரிய சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 33.33% ஒரு மாநிலத்தில் வனப்பகுதியாக இருக்க வேண்டும் என்பது வனதேசிய கொள்கையின் படி அரசு அறிவித்திருகிறது ஆனால் கடலூரில் ஐந்து சதவீதமும், தமிழத்தில் பதினேழு சதவீதமும் தான் வனப்பகுதி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது,ஆகவே தமிழகத்தை 33% வனப்பகுதி உள்ள மாநிலமாக மாற்றுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.
 
1.1.2012 ஆங்கில புத்தாண்டு அன்று காலை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரியில் தானே புயலால் உயிரிழந்த குப்புசாமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லியதுடன் உதவி தொகையாக ரூ.10,000 வழங்கினார். சிதம்பரம் அருகிலுள்ள கீரப்பாளையத்திற்கு சென்றவர் அங்கே அமைந்துள்ள நீர்ஏற்றும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து செங்கமேடு, நஞ்சமகத்துவாழ்க்கை, அகரம் காலனி, குத்தாபாளையம்,சேந்திரகிள்ளை, தச்சக்காடு ஆகிய ஊர்களுக்கு சென்று புயலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உதவித் தொகையாக தலா ரூ.10,000 வழங்கினார்.
3.1.2012 அன்று தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெண்ணிடம் பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் பாளையங்கோட்டை என்னும் ஊரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி பத்தாயிரம் ருபாய் நிதியளித்தார். பின்னர் சோழதரம் வழியாக வீராரெட்டிகுப்பம் என்னும் இடத்திற்கு வந்தவர் அங்கு நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்பு பூவாலையில் மழையில் வீடு இடிந்து உயிரிழந்த மகாலட்சுமியின் குடும்பத்திற்கு ரூபாய் ஐயாயிரம் நிதிஉதவி அளித்தார். பின்னர் முற்றூர்,பிச்சாவரம், சின்னவாய்க்கால், பட்றையடி கிராமம், கிள்ளை ஆகிய பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்தார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் வித்தியாதித்தன் ஆகியோர் தொல்.திருமாவளவன் அவர்களை கிள்ளை பேரூராட்சியில் சந்தித்தனர். கிள்ளை பகுதி முழுவதும் உடனடியாக குடி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய கேட்டுகொண்டார். அப்போது விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி நிர்வாகிகள் திருமாறன், தாமரைச் செல்வன், பாலஅறவாழி, செல்லப்பன், செல்வமணி,கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
4.1.2012 அன்று தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடலூர் நகரத்தில் பெரிய கங்கனாங்குப்பம், வில்வநகர், புதுகுப்பம் காலனி, எஸ்.ஆர் காலனி, செல்லங்குப்பம் ஆகிய பகுதிகளுக்கும் புதுச்சேரியில் அபிசேகப்பாக்கம், டி.என் பாளையம் ஆகிய இடங்களுக்கும் சென்று தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வுசெய்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சிராப்பள்ளி பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சிராப்பள்ளி பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்

6-1-2012 வெள்ளிக்கிழமை - கற்பகரட்சகி மகால், திருச்சிராப்பள்ளி




தீர்மானங்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழு 6-1-2012 அன்று  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், திருச்சிராப்பள்ளி, கற்பகரட்சகி மகாலில்,  கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் தலைமையில் கூடியது.  மூன்று  ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைமை நிர்வாகிகள் முதல் ஒன்றியப் பொறுப்பாளர்கள் வரை புதிய பொறுப்பாளர்கள் நியமனம், நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த மூன்றாண்டு காலச் செயல்திட்டங்கள் மற்றும் வருங்காலச் செயல்திட்டங்கள் போன்றவை இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுபடு பொருள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.  கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமாகப் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. வீரவணக்கம்

 முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கான அறப்போராட்டத்தில்  கேரள அரசு மற்றும் இந்திய அரசின் தமிழின விரோதப்  போக்கைக் கண்டிக்கும் வகையில் தமது இன்னுயிரை ஈகமளித்த தோழர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடிமுழக்கம்  சேகர், சின்னமனூர் மணி, சின்னமனூர் இராமமூர்த்தி ஆகியோருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.  அத்துடன் கடந்த திசம்பர் 30, 2011 அன்று நள்ளிரவுக்கு மேல் கரையைக் கடந்த 'தானே' புயலின் தாக்குதலால் கடும் பாதிப்புக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உயிர்ப் பலியான சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் இப்பொதுக்குழு தமது அஞ்சலியைச் செலுத்துகிறது.

2. பேரிடர் பாதிப்பு

 அண்மையில் 'தானே' புயலின் தாக்குதலால் கடலூர், விழுப்புரம்  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதிகள் வரலாறு காணாத அளவில் மிகக் கடுமையான  பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  இலட்சக் கணக்கான கூரைக் குடிசைகள் சின்னாபின்னமாகிச் சிதைந்துள்ளன.  நெல், மக்காச்சோளம் போன்ற விவசாயப் பயிர்களும், முந்திரி, பலா, தென்னை, வாழை போன்ற பணப் பயிர் மரங்களும் இன்னும் பிற நிழல்தரும் மரங்களும் இலட்சக் கணக்கான அளவில் வேரோடு வீழ்ந்துள்ளன.  அத்துடன் பல்லாயிரக் கணக்கான மின் கம்பங்களும் தலைகீழாய்ச் சாய்ந்துள்ளன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு புயல் பாதிப்புக்குள்ளான இப்பகுதிகள் கடந்த ஒரு வார காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.  பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. குடிசைகளை இழந்து, பள்ளிக்கூடங்கள், திருமணக் கூடங்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள்  குடிநீர், உணவு, மாற்று உடை ஏதுமின்றி கடும் இன்னலுக்காளாகியுள்ளனர். 

 இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிகமிக மந்தமான நிலையில் முடங்கியுள்ளன.  குறிப்பாக கடலூர் மாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் புயல், மழை, வெள்ளம் ஆகிய இயற்கைச் சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.  எனவே கடலூர் மாவட்டத்தை 'பேரிடர் பாதிப்பு மாவட்டமாக' அறிவிக்க வேண்டும்.  தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு, அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய 'மதிப்பீட்டுக் குழு'வினை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.  கடலூர் மாவட்டத்தில் கூரை வீடுகளே இல்லாத, முழு அளவில் காரை வீடுகளைக் கட்டித் தருவதற்குச் சிறப்புத் திட்டமொன்றை அரசு அறிவிக்க வேண்டும்.  தற்போதைய பாதிப்புகளை ஈடுசெய்யவும், நீண்ட கால அளவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யவும் ஏற்ற வகையில் ரூபாய் பத்தாயிரம் கோடியை இந்திய அரசு பேரிடர் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.  இப்புயலில் உயிரிழந்தோர் குடும்ப நிதியை ரூபாய் 2 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தித் தரவேண்டும் எனவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

3. பரமக்குடி துப்பாக்கி சூடு 

 கடந்த 11-9-2011 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வில் காவல்துறையினர் நடத்திய அரச பயங்கரவாத அடக்குமுறையில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  இதனை தமிழக அரசின் தலையீடு இல்லாத வகையில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) விசாரணை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை எழுப்பியது.  மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.  தமிழக ஆளுநரிடம் முறையீடு செய்தது.  அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மையப் புலனாய்வுத் துறை விசாரணை கோரி வழக்குத் தொடுத்தது. மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் நடைபெற்ற அவ்வழக்கில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு வன்கொடுமையை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்முயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். 

 அக்கொலையில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர் அனைவரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து மையப் புலனாய்வுத் துறை தமது விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு மட்டுமல்லாமல் அதே நாளில் மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பிற இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்கொடுமைகளையும் மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

4. முல்லைப் பெரியாறு அணை

 முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழக்கின் இறுதித் தீர்ப்பை விரைந்து வழங்குவதற்கு ஏற்ற வகையில், நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களின் தலைமையிலான விசாரணை ஆணையம்  தமது அறிக்கையை மிக விரைந்து உச்ச நீதிமன்றத்தில்  ஒப்படைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின்  இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.  அத்துடன் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு வற்புறுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

5. கூடங்குளம் அணுமின் உலை

 கூடங்குளத்தில் அணுமின் உலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. மக்களின் உணர்வுகளை மதித்து இந்திய அரசு அணுமின் உலையை இயக்கும் முயற்சியை முழுமையாகக் கைவிட வேண்டுமென இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு  கேட்டுக்கொள்கிறது.  அதாவது ஜப்பான், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு வல்லரசுகள் ஏற்கனவே தாம் இயக்கிக் கொண்டிருக்கிற அணுமின் உலைகளை ஒவ்வொன்றாக இழுத்து மூடும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன.  இந்நிலையில் அந்நாடுகளில் மூடப்பட்டு வரும் அணுஉலைகளின் கட்டமைப்புக் கருவிகளையும், தாதுப் பொருள்களையும் மற்றும் அணுக் கழிவுகளையும் இந்தியாவில் கொட்டிக் குவிக்கும் வகையில் இந்தியாவுடன் புதிய புதிய ஒப்பந்தங்களைப் போடுகின்றனர்.  அத்துடன் அணுமின் உலைகளில் விபத்து நேர்ந்தால் அதற்கான அனைத்து வகையிலுமான பொறுப்பு இந்திய அரசுக்கே உரியது எனவும் வல்லரசுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.  இந்நிலையில் இந்திய அரசு ஏகாதிபத்திய நாடுகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையில் சிறிதளவேனும் குடிமக்களின் உணர்வுகளை மதிப்பதில் காட்டவில்லை என்பது உறுதிப்படுகிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் மின்சக்தியின் தேவையை எதிர்க்கவில்லை.  மாறாக, அணுசக்தியின் எதிர்விளைவுகளைத்தான் எதிர்க்கிறது.  எனவே அணுசக்தி மூலம் மின்சாரம் என்கிற கொள்கையைக் கைவிட்டு, மாற்று மின் திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டுமென இந்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்வதுடன், இந்தியாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற அணுமின் உலைகளையும் படிப்படியாகக் கைவிட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

6. இனப்படுகொலை - போர்க்குற்ற விசாரணை 

 இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக  நாடுகளின் துணையோடு கூட்டு அரச பயங்கரவாதத்தை  ஏவி இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு நியமித்த விசாரணைக் குழு அண்மையில் தமது அறிக்கையை  அரசிடம் ஒப்படைத்துள்ளது.  அக்குழு இராஜபக்சேவின்  தலைமையிலான இனவெறிக் கும்பலைக் காப்பாற்றும் நோக்கத்தில், அவர்களுக்கு ஆதரவான வகையில் அறிக்கையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் ஒரு சார்பான அவ்வறிக்கையைப் பொருட்படுத்தாமல் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென இப்பொழுதுக்குழு அனைத்துலகச் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது. 

 அத்துடன் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்களப் படை முகாம்களை  அப்புறப்படுத்தவும், சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றவும், தொடரும் அரச வன்கொடுமைகளைத் தடுக்கவும் அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் மாந்தநேய  அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்குழு வற்புறுத்துகிறது.

7. தூக்குத் தண்டனை ரத்து 

 இராஜீவ்  காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள கொலைத் தண்டனையை இந்திய  அரசு கைவிட வேண்டுமெனவும் அவ்வழக்கில்  ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

8. லோக்பால் வரம்புக்குள் பெரும் வணிக நிறுவனங்கள்

 ஊழலை ஒழிப்பதற்கு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் நீதி விசாரணை அமைப்புகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு சட்டமசோதாக்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மசோதா வரம்புக்குள் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு உதவி இல்லாமல் அதேவேளையில் இந்திய அரசின் உதவியோடு இயங்குகின்ற தொண்டு நிறுவனங்களும், மிகப்பெரும் முதலீடுகளைக் கொண்டுள்ள ஊடக நிறுவனங்களும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக அமைந்துள்ளது.  ஊழலுக்குக் காரணமான பல்வேறு சக்திகளுள் இத்தகைய தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இந்நிலையில் அத்தகைய நிறுவனங்களை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவராமல் தவிர்த்திருப்பது இச்சட்டம் முழுமையானதாக அமையவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.  எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தனியார் நிறுவனங்களையும், பதிவு செய்யப்பட்ட அதே நேரத்தில் வெளிநாட்டு உதவி பெறாத நிறுவனங்களும் உள்ளடங்கிய அனைத்துத் தொண்டு நிறுவனங்களையும், ஊடக நிறுவனங்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு இந்திய அரசை வற்புறுத்துகிறது. 

 மேலும்  மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாத வகையில் லோக் ஆயுக்தா அமைப்புகளைக் கட்டமைக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே அளிக்கும் வகையில் லோக்பால்  சட்டம் அமைய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு  கேட்டுக்கொள்கிறது.  அத்துடன் லோக்பால்  மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அங்க மாக இயங்கும் வகையில் அமைந்திட ஆதரவளிக்க வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

9. கார்பரேட் சமூக பொறுப்பு நிதி - கண்காணிப்புக் குழு 

 இந்தியாவில்  ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.  அந்நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தில் ஒரு பகுதியை சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள கிராமங்களின் மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும் என்பது சட்டப்படியான கடமையாகும்.  ஆனால், அவ்வாறு அந்நிறுவனங்கள் தமது இலாபத்தில் ஒரு பங்கை கிராமப் புறங்களின் வளர்ச்சிக்குச் சட்டப்படி செலவிடுகின்றனவா என்பதைக் கண்டறிவதற்கும், கண்காணிப்பதற்கும் அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லையெனத் தெரிகிறது.  அதாவது 'காரப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி'யை (சிஷிஸி) செலவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்ற வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

10. இடஒதுக்கீட்டுச் செயலாக்க ஆணையம் 

 தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை அரசு  மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுமையாக  நடைமுறைப்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், மைய  மற்றும் மாநில அரசுகள் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை.  இதனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலை நீடிக்கிறது.  தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயம் கருதி காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்படுவதும், பின்னர் அவ்வறிவிப்பை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பிலே போடுவதும் வாடிக்கையாக உள்ளது.  மைய, மாநில அரசுகளின் இத்தகைய மோசடிப் போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கென இடஒதுக்கீட்டு செயலாக்க ஆணையம் ஒன்றை நிறுவ வேண்டுமென மைய, மாநில அரசுகளை இந்தப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

11. தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கான ஆணையம்    

 மகளிர்  ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் மனித  உரிமைகள் ஆணையம் ஆகியவை தமிழகத்தில் அமையப்பெற்று இயங்கி வருகின்றன.  ஆனால் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கான ஆணையம் அமைக்கப்படவில்லை.  நீண்ட காலமாக இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.  எனினும், தமிழக அரசு அதனை ஒருபொருட்டாகக் கருதவில்லை என்பது வேதனையளிக்கிறது. 

 இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கான தமிழக அளவிலான  ஆணையத்தை உடனடியாக நிறுவ வேண்டும்  
என்று இப்பொதுக்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுத் தொகுப்பிலிருந்து இசுலாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்வதென இந்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.  இந்திய அளவில் 16 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட இசுலாமியருக்கு நான்கில் ஒரு பங்கு அளவே இடஒதுக்கீடு அளிப்பது என்கிற முடிவு அம்மக்களை ஏய்க்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.  கிறித்துவத்தைத் தழுவிய தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அத்தகைய உள்ஒதுக்கீட்டையும் வழங்க இயலாத நிலையில் இந்திய அரசு அம்மக்களின் கோரிக்கையை புறந்தள்ளி வருகிறது.  இதற்கு உச்ச நீதிமன்றத்தின் இடஒதுக்கீடு தொடர்பான 50 விழுக்காடு வரம்பு என்னும் ஆணையே காரணமாக அமைந்துள்ளது.  எனவே, சமூக நீதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் இந்திய அரசு வலுவான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

12. காவல் நிலைய வன்கொடுமைகள் - தண்டிக்க புதிய சட்டம்

 தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் குறவர், இருளர் போன்ற  பழங்குடியினர் திட்டமிட்ட பொய் வழக்குகளுக்கு இலக்காவதும், விசாரணை எனும் பெயரில் சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்தல், கொலை செய்தல், பாலியல் வன்கொடுமைகள் செய்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதும், படுகொலைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.  இத்தகைய அரச வன்கொடுமைகளில் ஈடுபடும் காவல்துறையினர் மீது அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்கிறது.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இப்போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல்நிலைய வதைகள் மற்றும் படுகொலைகளைத் தடுக்கும் வகையிலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையினரைத் தண்டிக்கும் வகையிலும் புதிய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனவும், அதற்கென தனி நீதி விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டுமெனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

13. பால் விலை, பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் உயர்வு

 அடித்தட்டு  மக்களை வெகுவாகப் பாதிக்கும் வகையில் பால் விலை, பேருந்துக் கட்டணம் மற்றும் மின்கட்டணம் ஆகியவற்றை அண்மையில் தமிழக அரசு மிகக் கடுமையான அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.  ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் இத்தகைய விலை உயர்வு மற்றும் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

14. பஞ்சமி நில மீட்பு  ஆணையம்

 தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கென ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அனைத்தும் ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன.  தமிழகமெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறியவும் அவற்றை மீட்டு உரியவருக்கு ஒப்படை செய்யவும் தமிழக அரசு ஏற்கனவே நியமித்துள்ள பஞ்சமி நில மீட்பு ஆணையம் முறையாக இயங்க அனுமதிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 

15. மணல் அள்ளத் தடை

 ஆறு, ஏரி, குளம், குட்டை போன்றவை நாடு தழுவிய  அளவில் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகியிருக்கின்றன.  மேலும் ஆற்று மணல் அரசின் அனுமதியோடு சூறையாடப்படுகிறது. இதனால் இயற்கை வாழ்வாதாரங்கள் மிகக் கடுமையான  அளவில் பாதிப்படைந்துள்ளன.  எனவே, மணல்  அள்ளுவதற்குரிய அரசு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்.  மணல் அள்ளுவதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனவும், நீர்ப் பிடிப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

16. முழுமையான மது விலக்கு  

 சேரி மற்றும் குப்பங்களில் டாஸ்மாக் என்னும் அரசு  மதுக்கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.  இது அடுத்தடுத்த தலைமுறைகளை வெகுவாகப் பாதிக்கும்.  எனவே மதுவிலக்குக் கொள்கையைத் தீவிரப்படுத்தி அரசு சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

17.  2012 - எழ்ச்சிதமிழர் பொன்விழா ஆண்டு

 விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  அவர்களின் 50ஆவது பிறந்த நாளையட்டி, 2012ஆம்  ஆண்டை பொன்விழா ஆண்டாக கொண்டாடுவது  என்றும், அதனையட்டி வருகிற ஆகத்து 17 தமிழர்  எழுச்சி நாளன்று மாபெரும் அரசியல் மாநாடு  நடத்துவது என்றும், அந்நாளில் விடுதலைச் சிறுத்தைகளுக்கென  தொலைக்காட்சி ஊடகம் ஒன்றைத் தொடங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதெனவும் இக்குழு தீர்மானிக்கிறது.

18புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

 மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதற்குரிய விண்ணப்பங்களை 6-1-2012 முதல் 31-1-2012 வரை உரிய கட்டணத்துடன் பெறுவது எனவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.  அத்துடன், பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக அனைத்துப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைவரின் நியமன முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது எனவும் இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளின் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்


இயேசு பெருமான் பிறந்த நாளில் 
மனிதநேயம் வளர்க்கவும்  
சமத்துவத்தை நிலைநாட்டவும் உறுதியேற்போம்!

எழுச்சித்தமிழர்  கிறிஸ்துமஸ் வாழ்த்து!


இயேசு பெருமானின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பெருநாளில் கிறித்தவ மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

""வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்; இளைப்பாறுதல் தருவேன்'' என்று துன்பத்தாலும் துயரத்தாலும் துவண்டு கிடக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்விற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடிய மாமருந்தாய் விளங்குகிற மாமனிதர்தான் இயேசு பெருமான். அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிராக போர்க் குரல் எழுப்பிய போராளியாக தமது பொதுவாழ்வைத் தொடங்கிய இயேசு பெருமான், மனிதநேயமே அமைதியான வாழ்வுக்கு அடிப்படை என்பதை உலகுக்கு உணர்த்தினார். அடுத்தவர் மீது அன்பு செலுத்துவதும், கருணை காட்டுவதும், பாவம் செய்தவரை மன்னிப்பதும் போன்ற மனிதநேய அணுகுமுறை மூலம்தான் மானுட வாழ்வில் அமைதியை நிலைநாட்டுவதற்குரிய வழிகள் என்பதைப் போதித்தார்.

மற்றவர் உழைப்பைச் சுரண்ட நினைப்பதும், பகைமையை வளர்ப்பதும், பழிவாங்க நினைப்பதும் அன்பில்லாத வாழ்வையும் அமைதியில்லாத உலகையும் உருவாக்கும் கேடுகளாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆகவேதான் பகைவர்கள் தம்மை சிலுவையில் அறைந்த போதும் அவர்களை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு மனிதனும் அவ்வாறு மன்னிக்கும் உயர்ந்த மாண்பினைப் பெற வேண்டும் என்பதை தனது மரணத்தின் மூலமாக மானுடத்துக்கு உணர்த்தினார். அத்தகைய மாமனிதரின் வழிகாட்டுதலை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட கோடானுகோடி மக்கள் அவரை கடவுளின் தூதராக மட்டுமின்றி கடவுளாகவே ஏற்று வழிபட்டு வருகின்றனர். உலகம் போற்றும் உத்தமர், புனித மகான் இயேசுவின் பிறந்த நாளில் மனிதநேயம் வளர்க்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவும் உறுதியேற்போம்!.

இவண்

 (தொல். திருமாவளவன்)